வீறு கொண்டு ஓடும் விளையாட்டு வீரமங்கை: அகிலத்திருநாயகி
சிறிதாருணி சிறிதரன்
இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் ஆதரவுடன், நாட்டிலுள்ள சில விளையாட்டு வீராங்கனைகளின் உற்சாகமூட்டும் கதைகளை மையப்படுத்தி ‘இலங்கைப் பெண்களின் கதைகள்’ எனும் திட்டத்தின் கீழ் சிறிய கதைகளைக் கொண்ட தொடரினை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இக் கதைகள் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சவால்களை உள்ளடக்கியதாயிருப்பதுடன், தமது எல்லைகளுக்குள் அவர்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.
நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை, மெலிந்த, உறுதியான தோற்றம் என முதுமையிலும் இளமையாக திகழும் ஓட்ட வீராங்கனை அகிலத்திருநாயகி. 73வது வயதில் தற்போது பயணம் செய்யும் இவருக்கு முதுமை சார்ந்த எந்த விதமான பயமும் இல்லை. முதுமை என்பது வீட்டிற்குள் இருப்பதற்கே என்ற எமது சமுதாயத்தின் முற் கற்பிதங்களை கேள்விக்குட்படுத்தி சாதனை புரிவதற்கு வயதும் வயோதிபமும் ஒரு தடையல்ல என்ற செய்தியினை எமக்கும் எம் சந்ததிக்கும் இன்று வழங்கியிருப்பவர்.
இலைமறை காயாக, மற்றவர்களுக்கு தெரிந்தும் தெரியாமலும் இருந்த அகிலத்திருநாயகி இன்று அனைவராலும் பேசப்படும், பேட்டி காணப்படும் ஒரு நபராக மாறி இருப்பது அவருடைய முயற்சியுடனான விளையாட்டுக்கு கிடைத்த ஒரு வரப்பிரசாதமாகும்.
பண்டாரவன்னியனின் ஆட்சியிலே மிளிர்ந்த வன்னி பிரதேசத்தில், முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை பிரதேசத்திலே, செல்லப்பா, சிவக்கொழுந்துவிற்கு 6வது பெண்பிள்ளையாக அகிலத்திருநாயகி அவர்கள் 1951ம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் திகதி பிறந்தார். சிறுவயதிலே ஆரம்ப கல்வியை கலைமகள் வித்தியாலயத்திலும், இடைநிலைக்கல்வியினை முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரியிலும் கற்று தேர்ச்சி பெற்றதுடன் மட்டுமல்லாது பாடசாலை காலத்திலிருந்தே விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி பாராட்டுக்களையும் சான்றிதழ்களையும் பெற்றவர். விளையாட்டுக்கான ஆர்வத்தினையும் ஊக்கத்தினையும் இவருக்கு தாயார் மற்றும் ஆசிரியர்கள் வழங்கியிருந்தார்கள் எனக் குறிப்பிடுகிறார்.
வவுனியா மாவட்டத்திலே முதலாவது பெண் சிறைச்சாலை உத்தியோகத்தராக 1975ம் ஆண்டு நேர்முகப்பரீட்சை ஊடாக தெரிவு செய்யப்பட்டாலும் இந்த வேலைக்கு அனுப்புவதற்கு தாயார் தயங்கிய நிலையில் கூட தனக்கு பிடித்த வேலையினை செய்ய வேண்டும் என்ற விருப்பத்தினால் தனது தாயாரிடம் தன்னுடைய உழைப்பின் மூலம் கிடைக்கும் வருமானத்திலே தான் இந்த குடும்பத்தினை பார்க்க வேண்டும் என்று கூறி அவரை சமாதானப்படுத்தியது மட்டுமல்லாமல் அந்த வேலைக்கு சென்றதாகவும் தெரிவித்தார். அவரது 12வது வயதில் தந்தை இறக்க இவரின் தாயாரே இவரை ஒரு வீரமங்கையாகவும் ஓட்ட வீராங்கனையாகவும் வளர்த்தவர். 86வது வயதில் அவரது தாய் காலமாகும் வரை அகிலத்திருநாயகிக்கு சிறந்த ஆதரவாகவும் உறுதுணையாகவும் அவரது தாய் இருந்ததை நினைவு கூறுகிறார். 1979ம் ஆண்டு சிறிசெயானந்தபவன் என்பவரை திருமணம் முடித்து யசாந்தி, தீபன் எனும் இரு புதல்வர்களை பெற்றதுடன் தனது 32வது வயதிலே கணவனை இழந்தாலும் கூட துவண்டு விடாமல் வீட்டினையும் வேலையினையும் திறம்பட நிர்வகித்தவர்.
சிறைச்சாலை உத்தியோகத்தராக கடமையாற்றிய காலத்தில் சிங்கள மொழியிலும் தேர்ச்சி பெற்றவர். 37 வருடங்கள் சிறைச்சாலை உத்தியோகத்தராக கடமையாற்றியதுடன் மட்டுமல்லாமல் சிறைச்சாலை பொறுப்பாளராக பதவி உயர்வு பெற்றதன் பின்னர் 2012ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார். முல்லைத்தீவு, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், அநுராதபுரம் மற்றும் கொழும்பு ஆகிய இடங்களில் இவர் கடமையாற்றியுள்ளார். “சிறைச்சாலை கைதிகளும் மனிதர்களே” என்ற கூற்றினை உண்மையாக்கி அனைத்து கைதிகளுடனும் அன்பாக பழகியவர். இவர் தனது 48வது வயதில் சிறைச்சாலைகளுக்கிடையிலான விளையாட்டுப் போட்டி நடாத்தப்பட்ட போது அதில் பங்குபற்றி சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டதுடன் 2008ம் ஆண்டு வெலிக்கடை மற்றும் கண்டி போகம்பறை சிறைச்சாலைகளின் சிறந்த விளையாட்டு சாதனையாளர் என்ற பட்டத்தையும் வெற்றிக் கிண்ணத்தினையும் சுவீகரித்துக் கொண்டுள்ளார். மேலும் 2009ம் ஆண்டு தமிழ்,சிங்கள புத்தாண்டு விளையாட்டுகளின் போது 5000M ஓட்டப்போட்டியிலும் துவிச்சக்கர ஓட்டப்போட்டியிலும் முதலாவது இடத்தினை பெற்றுக்கொண்டதாக குறிப்பிடும் இவர் இன்றுவரை தனது உள்ளுர் பயணங்களை துவிச்சக்கர வண்டியிலேயே மேற்கொள்கின்றார். மேலும் 2010ம் ஆண்டு வட ஆளுனரின் தலைமையிலே இலங்கையின் சிறந்த சாதனையாளர் என்ற விருது யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் 2010ம் ஆண்டு கொழும்பில் நடைபெற்ற வண்ண இரவுகள் நிகழ்வில் A தர விளையாட்டு வீராங்கனை என்ற சான்றிதழும் கிடைக்கப்பெற்றது. மேலும் 2020ம் ஆண்டு பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்திலே அமெரிக்கன் தமிழ் பல்கலைக்கழகத்தினாலே வாழ்நாள் சாதனையாளர் விருதும் கலாநிதிப்பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்மையும் குறிப்பிடத்தக்கது.
2016, 2017, 2018, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் கம்பளை, மாத்தறை ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டு சிறந்த வீராங்கனையாக தெரிவு செய்யப்பட்டதோடு வெற்றிக் கேடயத்தினையும் பெற்றுள்ளார். 2022ம் ஆண்டில் 5 தங்கப் பதக்கங்களையும் 2 வெள்ளி பதக்கங்களையும் பெற்றுள்ளதோடு 2023ம் ஆண்டு காலப்பகுதியில் மட்டும் 14 தங்கப்பதக்கங்களை பெற்றுள்ளார். மேலும் இவர் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்குபற்றி தனது சாதனைகளை நிலைநாட்டியுள்ளார். எம்மவர் மத்தியில் ஒரு போட்டி என்றால் கூட, அடுத்த மாவட்டத்திற்கு தனியாக சென்று வர சோம்பல் நிலை காணப்படும் நிலையில், இந்த வயதிலும் எந்த இடத்திற்கும் போட்டி என்றால் சென்று வர தயங்காத திடமான மனம் கொண்ட இவர், தனது ஊக்கம் மற்றும் ஆரோக்கியம் தான் இம் மனநிலைக்கு காரணம் என்று தெரிவிக்கிறார். “ஆரோக்கியம் என்பது உடம்பு மட்டும் சம்பந்தப்பட்டது இல்ல உள ஆரோக்கியம் தான் மிக முக்கியமானது” என்றும் குறிப்பிடுகிறார்.
பிலிப்பைன்ஸ் நாட்டில் கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நடைபெற்ற 22வது மூத்தோருக்கான ஆசிய தடகள சம்பியன் போட்டியில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்ற வேளை இந்துக்கள் கடைப்பிடிக்கும் விரதங்களில் ஒன்றான கௌரி விரதத்தினை அனுஷ்டித்ததாகவும் அந்த சந்தர்ப்பத்தில் கடுமையான களைப்பு தனக்கு ஏற்பட்டிருந்தாலும் கூட அதில் பங்கேற்று இரண்டு தங்கம், மற்றும் ஒரு வெண்கல பதக்கங்களை வெற்றி கொண்டதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
தனக்கு தற்போது நடைபெறுகின்ற கௌரவிப்புக்களான மாலை அணிவித்தல், பொன்னாடை போர்த்தல், பதக்கம், நினைவுச்சின்னம் வழங்கல் மற்றும் காசோலை வழங்கல் போன்றன சமூகத்தின் ஒரு முன்மாதிரியான எடுத்துக்காட்டாகும் என்பதனால் தன்னை யார் அழைத்து இதனை செய்தாலும் அந்த அழைப்பினை தான் மறுப்பதில்லை என்பதுடன் கடந்த டிசம்பர் மாதம் (2023) கேப்பாப்புலவு இராணுவ படைப்பிரிவினர் தனது காணியிலேயே மேடை அமைத்து தனக்கான கௌரவத்தினை செய்ததாகவும் இந்நிகழ்வின் மூலம் இனம், மொழி, மதம் கடந்த மனிதாபிமானத்தை தான் கண்டதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். இதற்கு எல்லாம் மிக முக்கியமான காரணமாகவும் இன்றுவரை உறுதுணையாகவும் இருப்பவர் தன்னுடைய ஆசிரியர் திருமதி.கோ.ஐயம்பிள்ளை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
தன்னுடைய நினைவுப்பொருள் பற்றி இவர் கலந்துரையாடும் போது தனது துவிச்சக்கர வண்டியினையும் ஓம் எனும் மந்திரங்கள் சொல்லி பழையில் வைரவரையும் ஆஞ்சநேயரையும் நினைத்து தன் நெற்றியில் இடும் பொட்டினையும் நினைவு கூறுகின்றார். போக்குவரத்து தடை இருந்த காலம் தொடங்கி இன்றுவரை தனக்கு சைக்கிள் ஒரு சகோதரத்தை போல கூடவே இருப்பதாகவும் தனது வேலைகள், தனது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்து செல்வது, வயலுக்கு செல்வது போன்றவற்றிற்கு பெரிதும் துணையாக இருப்பதாகவும் குறிப்பிட்டார். பெண்கள் சைக்கிள் ஓடுவதற்கு சிறுவயதில் அவருக்கு தடை இருந்ததனால் இவர் சிறுவயதில் சைக்கிள் ஓட பழகவில்லை. வேலை செய்யும் காலத்தில் முள்ளியவளை பகுதியில் இருந்து முல்லைத்தீவிற்கு வேலைக்கு செல்வதற்காக பஸ் வண்டியினை எதிர்பார்த்து காத்திருந்த போது பஸ்கள் எதுவும் வரவில்லை, அதற்கு காரணம் மலையக தமிழர்களின் ஹர்த்தால். “ஆனால், அன்றைய தினம் தாங்கள் கட்டாயம் வேலைக்கு செல்ல வேண்டி இருந்தது. வேறு ஆண்களுடன் சைக்கிளில் ஏறி பெண்கள் செல்ல முடியாது, சமூகம் அதனை ஒரு குறையாக கதைக்கும் என்ற காரணத்தினால் தான் அதை தவிர்த்து நடக்க வேண்டி இருந்தது”, எனக் குறிப்பிட்ட அவர் அந்த ஒரு காரணத்திற்காக அன்றைய தினம் வேலைக்கு போகாமல் வீட்டிற்கு போய் அம்மாவிடம் “என்னை பிற்போக்காக வளர்த்துவிட்டீர்கள்” என்று அழுததாகவும், “அன்று வந்து ஒரு பழைய சைக்கிள் எடுத்து 31வது வயதில் தான் நான் சைக்கிள் ஓடப்பழகினேன்” எனவும் தெரிவித்தார். அவர் அப்படி ஓடப்பழகியதன் விளைவு வவுனியா, முல்லைத்தீவு பகுதிகளில் நடந்த சைக்கிள் ஓட்டப்போட்டியில் பங்குபற்றி முதலிடம் பெற்றதுடன் மட்டுமல்லாமல் இன்று வரை மிக வேகமாகவே சைக்கிள் ஓட்டிக்கொண்டிருப்பதாகவும் பெருமிதமாக குறிப்பிட்டார்.
எல்லா துறைகளிலும் சாதிப்பவர்களுக்கு எதிர்ப்புகள் வரும் என்றும் அந்த வகையில் தனக்கும் வந்திருப்பதாகவும் குறிப்பிட்ட இவர் “இந்த வயதில இதெல்லாம் தேவையா, ஓடி விழுந்து கைகால் முறிஞ்சால் என்ன செய்வா, யார் பார்ப்பார்கள்” என்ற விமர்சனங்களை தன்னுடைய காதுகள் செவிமடுத்திருப்பதாகவும் அந்த கதைகளை சொல்பவர்கள் யாருமே உண்மையில் அப்படி நடந்தால் கூட பார்க்க வரமாட்டார்கள் என்ற விடயம் தனக்கு தெளிவாக தெரியும் என்பதனால் அந்த விமர்சன வார்த்தைகள் எதுவும் தன்னை பாதிப்பதில்லை என்று தெளிவாக எடுத்துரைக்கிறார். தனிப்பட்ட வாழ்க்கை, வேலை மற்றும் விளையாட்டு ஆகிய மூன்றையும் ஒரு சேர சமநிலையாக பராமரித்தவர் அகிலத்திருநாயகி. வாழ்க்கையில் ஏதாவது இடர்பாடு, மனக்கசப்பு ஏற்பட்டால் கூட ஒரு விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றுவதன் மூலம் கிடைக்கும் வெற்றி அதனை எல்லாம் மறக்கச் செய்துவிடும் என்று, விளையாட்டுடன் தான் கொண்டுள்ள பிணைப்பை புன்னகையுடன் வெளிப்படுத்துகிறார்.
இவர் தற்போது வாழும் வீடும் சுயமுயற்சியினால் கட்டப்பட்டுள்ளது. 1987ம் ஆண்டு ரணசிங்க பிரேமதாசா ஜனாதிபதியாக இருந்த காலப்பகுதியில் அவரின் வீட்டுத்திட்டத்தின் கீழ், சுய முயற்சியில் மண் வீடு கட்டுவதற்கான போட்டி நடத்தப்பட்டதுடன் அதற்கு பரிசில் வழங்கப்படும் என்ற அறிவிப்பும் விடுக்கப்பட்டது. தான் அதில் பங்குபற்றியதுடன் குறிப்பிட்ட விதிமுறைப்படி சாப்பாட்டறை, சமையலறை உட்பட கைவண்ணங்கள் ஊடாக வீட்டினை அழகுபடுத்தியதுடன் மட்டுமல்லாமல் உள்ளுர் உற்பத்தி பொருட்களான ஓலை, தென்னை மட்டை, தும்பு மற்றும் பன்னாடை போன்ற பொருட்களை பாவித்து அதனை உருவாக்கியதாகவும் அதனுடன் இணைந்து வீட்டுத்தோட்டமும் செய்த காரணத்தினால் போட்டியில் வீடு முதலாவது பரிசினை பெற்றதாகவும் மகிழ்வுடன் நினைவு கூர்ந்தார். ஓட்டப் போட்டி மட்டுமல்லாமல் எந்த போட்டி என்றாலும் தான் அதில் முழு விருப்புடன் இன்றுவரை பங்குபற்றி வருவதாகவும் “எனது நோக்கம் வெற்றி எனும் இலக்கு மட்டுமல்ல முயற்சி செய்வதாகும்” என்று குறிப்பிடுகிறார். தன்னுடைய திறமையினை இலங்கை வாழ் மக்கள் அறிந்து கொண்டதே தன்னுடைய 72வது வயதில் என புன்னகையுடன் தெரிவிக்கும் இவர், தனது திறமைக்கும் சாதனைக்கும் தற்போது வரை துணை நிற்பது தான் வணங்கும் வைரவரும் தனது தாயும் என நம்புகிறார். இந்த வைரவருக்கு ஒரு கோயில் தன்னுடைய காணியிலேயே கட்டியிருப்பதாகவும் அந்த கோவிலுக்குள்ளே தன்னுடைய அம்மாவின் உருவப்படத்தையும் வைத்திருப்பதாகவும் மனநிறைவுடன் தெரிவிக்கின்றார்.
1975ம் ஆண்டு அவர் வேலைக்கு செல்லும் போது நாள் சம்பளமாக 06 ரூபாய் மட்டுமே கிடைத்துள்ளது. அந்த வருமானம் போதாமையினால் அவர் தையல் வேலை, கூடை, பைகள் பின்னுதல், பயிர் செய்தல், எள் எண்ணெய், தேங்காய் எண்ணெய் உருக்குதல் போன்ற பல்வேறு சுய தொழில் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இவ்வாறு சிறு வயது முதலே பல திறமைகளும் ஊக்கமும் கொண்ட இவரிடம் நேர்சிந்தனை, சட்ட ஒழுங்கை மதித்து நடத்தல், சுய உழைப்பு, சமூகத் தொண்டு என முன்மாதிரியான பல நல்ல விடயங்களினை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. பொலிஸ் மற்றும் இராணுவத்திற்கு ஈடான ஒரு வேலை தான் சிறைச்சாலை உத்தியோகம் என்றும், பொலிஸ் மற்றும் இராணுவத்தினரை பார்க்கும்போது ஒரு பயம் கலந்த மரியாதை உருவாகும் என்றும் அதனை வைத்து நிறைய நல்ல விடயங்களை தான் சாதித்திருப்பதாகவும் கூறும் இவர் எந்த இடத்திற்கும் எந்த நேரத்திலும் தனியாக சென்று வருவதற்கு தான் தயங்கியதில்லை என்றும் “பெண்கள் எப்பொழுதுமே வீரமாக செல்லவேண்டும் தங்களுடைய கைகளையே ஆயுதமாக தங்களது பாதுகாப்புக்கு பாவிக்க வேண்டும்” என்றும் தெரிவித்தார். பெண்கள் என்றால், “திருமணம் கட்டாயம் செய்யவேண்டும், பொம்பிளைக்கு பாதுகாப்பு எண்டு… அதெல்லாம் உண்மையான கதை எண்டு சொல்ல முடியாது. ஒரு திருமணம் கட்டித்தான் வாழ வேண்டும் என்ற விஷயம் உண்மையில்லை. எங்களுக்கு அதைவிட எத்தனையோ விடயங்கள் இருக்கு” என்னும் தனது தனிப்பட்ட கருத்தினை வெளிப்படுத்திய இவர், எமது வாழ்க்கையினை நாங்கள் தான் தீர்மானிக்க வேண்டும் என்பதுடன் இந்த சமூகத்திற்கு சாதித்து காட்டுவதற்கு எத்தனையோ விடயங்கள் இருப்பதாகவும் குறிப்பிடுகிறார்.
பெண்கள் தனியாக வாழ்வதற்கு எந்தவிதமான தயக்கத்தினையும் காட்டக்கூடாது என்பதுடன் சுயதொழில் எப்பொழுதுமே அவர்களை காப்பாற்றும் என ஆணித்தரமாக நம்புகிறார். தான் செய்யும் விவசாயத்தின் மூலம் தனக்கு எப்போதும் உணவிற்கு பஞ்சம் இருந்ததில்லை என்றும் அந்த நெல்லை குற்றி அவித்து தனக்கும் எடுத்துக்கொண்டு தன்னிடம் வருபவர்களுக்கும் அன்னதானம் வழங்குவதாகவும் மிக மகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார். தனது பொழுதுபோக்கிற்காக பூனை மற்றும் நாய் போன்ற செல்லப்பிராணிகளை வளர்க்கும் இவர், அதற்கு வெண்பா, தம்பி மற்றும் வேவி என பெயர் வைத்திருக்கிறார், “மிருகங்களுக்கும் ஒவ்வொரு உணர்ச்சிகள் இருக்கின்றன , இதை அனைவரும் உணர்வதில்லை”, அதனை நாங்கள் புரிந்து கொண்டு நடக்க வேண்டும், இவைகளிடம் காட்டும் அன்புதான் உண்மையானது என்று குறிப்பிடுகிறார். “அனைத்து உயிர்களிடத்திலும் அன்பாயிரு” என்பதே இவருடைய வேண்டுகோளாக அமைகிறது.
அகிலத்திருநாயகியின் வாழ்க்கைப் பயணம் இன்றைய இளம் சந்ததியினருக்கு ஒரு முன்னுதாரணமாக இருப்பதுடன் பெண்ணிலைவாத மற்றும் பெண்கள் உரிமைசார் கலந்துரையாடல்களுக்கான மையம் பொருளாகவும் அமைகிறது எனலாம். இவருக்கு சிறு வயது முதலே விளையாட்டில் ஆர்வம் இருந்து. “பெண்கள் அதில் ஈடுபட்டாலும் கூட பாடசாலை கல்வியினை முடித்த பிறகு பெண்களுக்கான விளையாட்டு தொடர்பான வாய்ப்புக்கள் எமது சமூகத்தில் குறைவு, ஆண்களுக்கும், ஆண் பிள்ளைகளுக்கும் விளையாட்டுக்கு கொடுக்கப்படும் முக்கியத்துவத்தினை பெண்களுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் எமது சமூகம் வழங்குவதில்லை” என்று ஆதங்கப்பட்டார். பெண்கள் சாதிப்பதற்கும் தங்களை நிலைநிறுத்துவதற்கும் தங்களால் முடிந்த விடயங்களில் ஈடுபட்டு முன்மாதிரியாக திகழ வேண்டும் என்பதே அவரது அவா ஆகும். “எங்கட கலாச்சாரம், கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டதல்ல விளையாட்டு அதுவும் எங்களோட சேர்ந்தது, இதை முதல்ல உணரவேண்டும்” எனவும் பெண்களுக்கு தற்போது உடல் சார்ந்த பிரச்சனைகள் நிறைய இருப்பதாகவும் அதற்கு முதற்காரணம் உடல் சார்ந்த பயிற்சிகள், விளையாட்டுக்கள் மற்றும் உடல் உழைப்பு இல்லாமையே என்றும் குறிப்பிட்டார். “விளையாட்டுக்கு வயது ஒரு தடையல்ல” என தெரிவிக்கும் இவர், 2014ம் ஆண்டு சிங்கப்பூரில் நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் பங்குபற்றிய போது, தான் வெளிநாட்டுப் போட்டிகளில் பங்குபற்றி குறைந்தது 5 தங்கப் பதக்கங்களையாவது பெற்றுக் கொள்ள வேண்டும் என தனக்கான ஒரு இலக்கை தானே உருவாக்கிக் கொண்டார். அந்த இலக்கு 9 வருடங்கள் தாண்டி 2023ம் ஆண்டு பிலிப்பைன்ஸ் நாட்டில் நடைபெற்ற போட்டி வரை தொடர்ந்ததாகவும் தெரிவித்தார்.
“இன்றைய நாள் நல்லதாக அமைய வேண்டும், வாழ்க வளமுடன்” போன்ற நல்ல வார்த்தைகளை அடிக்கடி உச்சரிக்கும் இவர், இதன் மூலம் நேர்சிந்தனை தனக்குள் உருவாகுவதாக தெரிவிக்கிறார். மக்களிடம் தற்போது ஏற்பட்டுள்ள தூரநோக்கற்ற குறுகிய மனப்பாங்குடனான சிந்தனை, சுயநலமான வாழ்க்கை முறை என்பவற்றில் மாற்றங்களை ஏற்படுத்தவும் எதிர்கால சந்ததியினர் ஆளுமை மிக்கவர்களாக உருவாகுவதற்கும் விளையாட்டுக்கள் உதவி செய்யும் என்பதுடன் ஆலயங்கள், சிவில் சமூக அமைப்புக்கள், அரச மற்றும் அரசசார்பற்ற நிறுவனங்கள், பாடசாலைகள் மற்றும் பொதுமக்கள் இணைந்து பொது விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதன் ஊடாக இந்த மனப்பாங்கு மாற்றங்களை உருவாக்க முடியும் என தான் ஆணித்தனமாக நம்புவதாகவும் தெரிவிக்கிறார். இவருடைய எதிர்காலம் பற்றிய கனவாக இருப்பது “ஏசியன் மீற் மற்றும் ஒலிம்பிக் போன்ற போட்டிகளில் ஒரு தடவையாவது பங்குபற்றுவதுடன் இந்தியா, தாய்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளில் 2024ம் ஆண்டு நடைபெறவுள்ள போட்டிகளில் பங்கேற்க வேண்டும்” என்பதாகும்.
இலங்கை நாட்டை சேர்ந்த விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு உரிய பயிற்சிகள் கிடைப்பதில்லை என்பதுடன் அதற்கான வசதி வாய்ப்புக்கள் குறைவாக இருப்பதாகவும் குறிப்பிடும் இவர், இந்த நிலையினை மாற்றியமைப்பதற்காக அரசாங்கம் கட்டாயம் விளையாட்டுக்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதுடன் மட்டுமல்லாது அதற்கான ஊக்குவிப்புக்களை செய்யவேண்டும் என்பதுடன் வெளிநாட்டில் நடைபெறும் விளையாட்டுப் போட்டிகளில் பங்குபற்ற ஒத்துழைப்பும் வழங்க வேண்டும் என்கிறார். மேலும் விளையாட்டில் பிள்ளைகளை ஈடுபடுத்தி மாவட்ட, மாகாண, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பங்கு பற்ற வைத்தல், நடை பயிற்சி போட்டிகள் மற்றும் பாரம்பரிய விளையாட்டுக்களை நடாத்துதல் போன்ற விடயங்களை எதிர்காலத்தில் மேற்கொள்ள வேண்டும் என்ற ஆசை தனக்கு இருப்பதாக குறிப்பிடுகிறார். ஆரோக்கியமான உள்ளூர் உணவுகளை உட்கொள்வதன் மூலம் ‘சிறந்த உடல் மற்றும் உள ஆரோக்கியத்தினை பேணமுடியும்” என இவர் நம்புகிறார்.
எந்த இடத்தில் ஓட்ட போட்டியில் பங்குபற்றினாலும் வெற்றுக்கால்களுடன் ஓடும் இவர், “எங்கட பூமில ஒரு புவியீர்ப்பு சக்தி இருக்கின்றது. ஒவ்வொரு இடத்திலும் ஒரு புவியீர்ப்பு சக்தி இருக்கின்றது. அதில் கால் பதியும் பொழுது ஒரு சக்தி எங்களுக்கு தானாக வருகின்றது. இதை நான் உணர்ந்து தான் வெறும் கால்களுடன் ஓடுகின்றேன். சப்பாத்து வாங்கெல்லாம் காசு இருக்கின்றது. வாங்கலாம் ஆனால் நான் இப்படித்தான் பழகிக்கொண்டேன்”, என குறிப்பிடுகிறார். இன்று வரை தான் எந்த மைதானத்திற்குள் இறங்கினாலும் 16 வயது பெண் என உறுதியாக குறிப்பிடும் அகிலத்திருநாயகி, நம் அனைவருக்கும் வாழ்தல் என்றால் என்ன என்பதை தன் வாழ்வியல் மூலம் எடுத்தியம்பும் உறுதியான மனம் கொண்ட, வீழ்தல் இல்லா விளையாட்டு வீரமங்கையே!
(சிறிதாருணி சிறிதரன் மட்டக்களப்பு மாவட்டத்தினைச் சேர்ந்த ஒரு பெண் உரிமைச்செயற்பாட்டாளர். பெண்களுக்கெதிரான வன்முறைகளை தடுப்பதற்காக பறையிசைப்பவர். பால்நிலை மற்றும் பெண்கள் உரிமை தொடர்பான வளவாளர், ஆய்வாளர் மற்றும் கட்டுரையாளர்.)
ஆதார இணைப்புக்கள் :-
1. With medals aplenty but sans shoes, this septuagenarian aims for the Olympics, The Sunday Times, 17th December 2023, https://www.sundaytimes.lk/231217/plus/with-medals-aplenty-but-sans-shoes-this-septuagenarian-aims-for-the-olympics-542066.html
2. கடின உழைப்பால் தங்கப் பதக்கம் வென்ற தமிழ் பெண், IBC தமிழ் , டிசம்பர் 2023, https://ibctamil.com/article/akilathirunayaki-asia-senior-athletics-championshi-1700747550
3. தள்ளாடும் வயதிலும் தளராத மனம்.. சாதிக்க வயது ஒரு தடையல்ல…உலகுக்கே எடுத்துக்காட்டான அகிலத்திருநாயகி, தந்தி டிவி, 30 நவம்பர் 2023, https://www.thanthitv.com/News/World/an-unwavering-mind-even-at-an-age-akilathirunayaki-is-an-example-to-the-world-230271
4. வெற்றுக் காலுடன் ஓடி இலங்கைக்கு பெருமை சேர்த்த அகிலத் திருநாயகி: ஜனாதிபதி நேரில் அழைத்து மதிப்பளிப்பு, ஒருவன் , ஜனவரி 2024, https://oruvan.com/sri-lanka/2024/01/06/president-ranil-pays-tribute-to-akilathirunayaki-siriseyananthabavan-who-ran-barefoot-and-made-sri-lanka-proud
மேலும் தகவல் மற்றும் கருத்துகளுக்கு storyofslwomen@everystorysl.org ஐ மின்னஞ்சல் செய்யவும்.