Sitemap

தடகளத்தின் உள்ளேயும் வெளியேயும் உறுதிமிக்க ஒரு உயிரோட்டம்: குமுது பிரியங்கா

5 min readAug 14, 2024

பமோதி ஹெவாவரவிட்ட

இலங்கைக்கான பிரான்ஸ் தூதரகத்தின் ஆதரவுடன், நாட்டிலுள்ள சில விளையாட்டு வீராங்கனைகளின் உற்சாகமூட்டும் கதைகளை மையப்படுத்தி ‘இலங்கைப் பெண்களின் கதைகள்’ எனும் திட்டத்தின் கீழ் சிறிய கதைகளைக் கொண்ட தொடரினை வழங்குவதில் நாம் மகிழ்ச்சியடைகின்றோம். இக் கதைகள் அவர்களின் வாழ்க்கை அனுபவங்கள் மற்றும் சவால்களை உள்ளடக்கியதாயிருப்பதுடன், தமது எல்லைகளுக்குள் அவர்கள் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றது.

Press enter or click to view image in full size
எடுத்து காட்டுக்கு படங்கள் வரைபவர்: தனுஸ்ரீ வெலிகல

குமுது பிரியங்கா 2006ஆம் ஆண்டு பயிற்சி தொடங்கியதில் இருந்தே, பரா ஒலிம்பிக்கில் பிரகாசிக்க விரும்பினார். ஆனால், அதற்கு முன்பு அவர் தனது வாழ்க்கையில் மிகப்பெரும் அனர்த்தம் ஒன்றைச் சந்தித்திருந்தார். ஒரு கைக்குண்டு அவரது வீட்டின் பின் புறத்தில் இருந்து வெடித்து, அவருடைய கைகளையும் ஒரு கண்ணையும் காயப்படுத்தியது. அன்றிலிருந்து ஒரு பேருந்தில் பயணம் செய்யும் போது கூட தன் ஊனத்தை வெளிக்காட்டத் தயங்கிய குமுது, 2010 இல் நடந்த, பரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில், பெண்களுக்கான 200 மீட்டர் T45 பிரிவில் (முழங்கைக்கு மேல் அல்லது கீழ் இரு மடங்கு துண்டிக்கப்பட்டவர்களுக்கான விளையாட்டு வகைப்பாடு) உலக சாதனை படைத்தது வரை அவருடைய வாழ்க்கை கடின உழைப்புடன் கூடிய கனவுகள் நிறைந்தது.

மொனராகலை மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் பிறந்து வளர்ந்த குமுது, சாதாரண தரப் பரீட்சை முடிந்து வீட்டில் இருந்தபோது, அவரது தாய் அவர்களின் தோட்டத்தில் இருந்து ஒரு கைக்குண்டைக் கண்டெடுத்து அதனை என்னவென்று தெரியாமல் குமுதுவிடம் நீட்டியிருக்கிறாள். நடந்த அந்த நிகழ்வைக் குமுது விபரிக்கையில்;, “நான் அதை கையிலிருந்து எடுக்கும் போது, அதன் வெளிப்பகுதியினைத் தெரியாமல் அழுத்தியமையால் கைக்குண்டு வெடித்தது. நான் உயரமாக இருந்தமையால், அது என் கைகளிலிருந்து மேல்நோக்கி வெடித்தது. அதன் காரணமாக என் கைகள், என் மார்பு மற்றும் என் கண்ணிலும் காயங்கள் ஏற்பட்டன. நான் கைகளை இழந்தேன், ஒரு கண்ணின் பார்வையையும் இழந்தேன்”.

விபத்துக்குப் பிறகு, தான் சுயமாகச் செயற்படுவதற்காக எல்லாவற்றையும் மீண்டும் கற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறாள். முதலில் ஒரு கரண்டியால் உணவைச் சாப்பிடக் கற்றுக்கொண்டாள், பிறகு தன் சீப்பில் ரப்பர் கண்ணியைச் செருகுவதன் மூலம், தன் தலைமுடியைத் தானே சீவக் கற்றுக்கொண்டாள். “அப்போது என் தலைமுடி நீளமாக இருந்தது”, என்ற குமுது, இப்போது தனது தலைமுடியைச் சுட்டிக்காட்டி, உதவி கேட்டு யாரையும் தொந்தரவு செய்ய விரும்பாததால் அதைக் குறைத்ததாகக் குறிப்பிட்டார்.

குமுது தனது விபத்துக்குப் பிறகு சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற உறுதியுடன் பல ஆண்டுகள் உழைத்திருக்கிறார்;. “விளையாட்டைத் தொடர்வதற்காக நான் முதன் முதலில் கொழும்புக்கு வந்த போது, வேறு சில பெண்களுடன் மாளிகாவத்தையில் தங்கியிருந்தேன். என்னால் வேலைகளைச் சுயமாகச் செய்ய முடியாததால் அவர்கள் எனக்கு உதவி செய்தார்கள், ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, அது அவர்களுக்கும் ஏதோ பிரச்சினையாக இருப்பதை உணர்ந்தேன். அதன் பின் ‘நான் ஏன் வேறொருவரைத் தொந்தரவு செய்கிறேன்? நான் சுயமாகவே வேலைகளைச் செய்ய வேண்டும்’ என்று நினைத்துக்கொண்டேன்”.

குமுது குழந்தையாக இருந்தபோது அவளது தந்தை இறந்தார். தந்தை இறந்த பிறகு தாயால் வளர்க்கப்பட்ட குமுது எப்படியாவது வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று விரும்பினார். அவரின் இந்த உறுதியான எண்ணம் அவரது விபத்துக்குப் பிறகும் கூட தொடர்ந்தது. 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம், அவள் விபத்துக்குள்ளாகி சுமார் எட்டு மாதங்களுக்குப் பிறகு, எதிர்காலத்துக்கான வாய்ப்புகள் அவளது கதவைத் தட்டியபோது, முடிவெடுப்பதற்கு முன்பு அதிக நேரம் தயங்கவில்லை. “நான் 24ஆம் திகதி மே மாதம் 2005 ஆம் ஆண்டு காயமடைந்தேன். அதன் பின்னர்; 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பிரேமதாச திஸாநாயக்க ஐயாவைச் சந்தித்தேன். அவர் என்னைத் தேடி எனது வீட்டிற்கு வந்தார். அவர் ஒரு விளையாட்டுச் சங்கத்தின் அங்கத்தவராக இருந்தார், மேலும் அவர் மொனராகலை மாவட்டத்தில் ஊனமுற்றோரின் புனர்வாழ்வு சம்பந்தப்பட்ட திட்டங்களில் பணிபுரிந்தார். அவர் என்னைப் பற்றி ஏஜி அலுவலகத்தில் இருந்து தெரிந்து கொண்டு என் வீட்டிற்கு வந்திருந்தார்.”

பிரேமதாச அய்யா முதன் முதலில் தன்னைப் பார்க்கச் சென்றபோது, தான் வீட்டில் இருந்ததாக குமுது கூறுகிறார். “நான் அவரைச் சந்திக்க வெளியே கூடச் செல்லவில்லை. நான் மிகவும் கூச்ச சுபாவமுள்ளவனாக இருந்தேன்”, என்று அந்த நாளை அவள் நினைவு கூர்ந்தாள். அந்த முதல் நாளில் அவள் அவருடன் பேசாவிட்டாலும், அவர் உண்மையாகத் தனக்கு உதவ முயற்சிப்பதாக உணர்ந்தாள். இரண்டாவது முறையாக அவரைச் சந்தித்தபோது, அவரும் ஊனமுற்றவர் என்பதை உணர்ந்தாள். “அப்போதுதான் நானும் அவருடைய கதையைக் கேட்டேன். 18 ஆவது வயதில் ஊனமுற்ற திஸாநாயக்க ஐயா, சக்கர நாற்காலியில் இருந்து தனது வாழ்க்கையை உருவாக்கினார். அவர் இப்போது ஏனைய மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுகிறார். அந்தக் கதை என்னை மிகவும் உற்சாகப்படுத்தியது. எனது வாழ்க்கையைக் கட்டியெழுப்ப விளையாட்டு மட்டுமே ஒரே வழி என்று அவர் நம்புவதாகவும் குறிப்பிட்டார். அப்படித்தான் நான் விளையாட்டுத் துறைக்குள் நுழைந்தேன்;”.

குமுது விளையாட்டில் நுழைந்ததற்கு தனது அதிர்ஷ்டமே காரணம் என்று கூறினாலும், அவரது பயணம் எளிதானது அல்ல. 2006 ஆம் ஆண்டு தனது முதலாவது சர்வதேச போட்டியில் பங்கேற்றாலும், அவரது தாயார் அவருக்கு பொருளாதார ரீதியில் உதவ முடியாததால் விளையாட்டில் தனது ஈடுபாட்டை குறைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. “நான் இரண்டு சகோதரிகளுக்கு மூத்த சகோதரி ஆவேன். என் வாழ்க்கையில் ஏதாவது செய்ய வேண்டும், கொஞ்சம் பணம் ஈட்ட வேண்டும் என்று நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருந்தேன். 2006 ஆம் ஆண்டு நான் முதன் முதலில் விளையாட்டில் நுழைந்தபோது எனக்குத் தேவைப்பட்டதை விட இப்போது எனக்கு அதிக வசதிகள் தேவை. இவற்றின் மத்தியில், நான் எப்போதும் வருமானம் ஈட்டுவதையும் நோக்காக கொண்டிருந்தேன்.”

அப்போது தான் குமுது தற்போது தான் பணிபுரியும் MAS ஹோல்டிங்ஸை பற்றி அறிய நேர்ந்தது. MAS உடனான தனது உறவை ஒரு ‘பெரிய பலம்’ என்று விவரிக்கிறார். அவருடைய சக ஊழியர்கள் தன்னை ஒரு ஊனமுற்றவராக பார்க்கவில்லை எனக் குறிப்பிடுகிறார். “என்னால் என்ன செய்ய முடியும், நான் என்ன கற்றுக்கொள்ள விரும்புகிறேன் என்று அவர்கள் பார்த்து, அதைச் செய்ய எனக்கு உதவினார்கள். MAS இல், அனைவருக்கும் மூன்று மாத இயந்திரக் கற்றல் அனுபவத்தை வழங்குகிறார்கள். எனவே அதனை நானும் பூர்த்தி செய்துவிட்டு, அங்கிருந்து எனது பணியை ஆரம்பித்தேன். என்னால் வேலை செய்ய முடியாது என்பதால் அவர்கள் என்னை வேலையில் இருந்து நிற்கச் சொல்லவில்லை. அவர்கள் எனக்குக் கற்கும் சுதந்திரத்தைக் கொடுத்தது மட்டுமல்லாது எல்லாவற்றையும் கற்றும் கொடுத்தார்கள்.”

தன் இயலாமையை ஏற்றுக்கொள்ளக் கற்றுக்கொள்வதும் குமுதுவிற்கு எளிதான காரியமாக இருக்கவில்லை. பொது இடங்களில் நீண்ட கைகளை உடைய உடைகளை அணிந்து கொண்டு தன் கைகளை எப்படி மறைக்க முயன்றாள் என்பதை குறிப்பிடுகிறார். “நான் எப்போதும் என் இயலாமையை மறைக்க முயற்சிப்பேன், ஆனால் இப்போது அதைச் செய்வதில்லை”. குமுது தன் இயலாமையுடன் வாழக் கற்றுக் கொண்ட போது தனக்கு நேர்ந்த எதிர்மறையான அனுபவங்கள் உலகில் வழக்கமாக இருக்க கூடாது என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். “நான் சாலையில் நடக்கும்போது கூட, ‘அட, அந்தப் பெண்ணுக்கு கைகள் இல்லை’ என்று பலர் சொல்ல நான் பல முறை கேட்டிருக்கிறேன். ஆனால் நான் சிரித்துக்கொண்டே நடப்பேன். ஏனென்றால் நான் இப்போது என் மனதை அந்த அளவிற்கு வலுப்படுத்தியிருக்கிறேன். ஆனால் பெரும்பாலும் இளம் வயது மாற்றுத் திறனாளிகளாக இருந்து சமூகத்தை இப்படி எதிர் கொள்பவர்கள், மிகுந்த சிரமத்துடனும் மன அழுத்தத்துடனும் இருக்கிறார்கள். எனவே அவர்கள் அப்படி ஏதாவது கேள்விப்படின், அவர்களின் மன உறுதி பலவீனமடையும்”.

ஏனைய மாற்றுத்திறனாளிகள் சோர்வடையாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்பதும் தன்னைப் போன்ற சம்பவங்களை எதிர் கொள்பவர்களுக்கு உதவ வேண்டும் என்பதும் அவரது எண்ணமாக இருக்கிறது. அவர் எதிர்காலத்திற்கான அவரது கனவுகளை அதற்கேற்றவாறே வடிவமைத்துள்ளதுள்ளார். ஒரு பெண்ணாக, எதிர்ப்பு என்பது “எல்லா வழிகளிலும்” அவ்வப்போதைய நிலைமைகளை சவால் செய்வதாகும் என்று அவர் கூறுகிறார். “விளையாட்டுக்கு வந்த போது, எப்படியாவது வாழ்க்கையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதே என் எண்ணமாக இருந்தது. அதைத்தான் பிரேமதாச அவர்களும் உறுதியாகச் சொன்னார். அதைத்தான் நானும் என் இதயத்தில் உணர்ந்தேன். அவர் 2013 ஆண்டில் இறந்தார். அவர் இறந்துவிட்டார் என்பதை என்னால் இன்னும் நம்ப முடியவில்லை. அவர் என்னுடன் பேசுவதைப் போலவே நான் இன்னும் உணர்கிறேன்” என்ற குமுது தனது 16 வயதிலிருந்து இன்று வரையான தனது பயணத்தை கோடிட்டுக் காட்டும் போது, அவரது குரல் உணர்ச்சியின் மிகுதியில் தளுதளுக்கின்றது. இரண்டு தசாப்தங்களுக்குப் பிறகு, டோக்கியோவில் நடந்த 2020 பரா ஒலிம்பிக்கில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஒரே பெண்மணியாக அவர் நினைத்ததை அடைந்தார்.

அவர் தனது ஒலிம்பிக் கனவை நனவாக்குவதற்கு அண்மித்திருந்த போது, கொவிட்-19 தொற்றுநோய்ப் பரவல் எவ்வாறு தனக்கு சவாலாகியது என்பதையும் நினைவு கூர்ந்தார். “எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது, கொவிட்-19 தொற்று நோய் பரவலின் மத்தியில், விளையாட்டில் ஈடுபடுவது மிகவும் சவாலாக இருந்தது. எங்களால் வெளியே செல்ல முடியவில்லை, பயிற்சி எடுக்க முடியவில்லை, தனிமைப்படுத்தப்பட்டோம். நாங்கள் ஒரு குறுகிய எல்லைக்குள் பயிற்சி செய்ய வேண்டியிருந்தது”. குமுதுவின் பயணம் இடையூறுகள் நிறைந்ததாகவே இருந்தது. இருந்தபோதும் தடகளத்தின் உள்ளேயும் அதற்கு வெளியேயும் அவளின் நீடித்த உழைப்பால் உலக வரலாற்று புத்தகங்களில் தனது சொந்த கதையை அவளால் எழுத முடிந்தது.

(பாமோதி ஹெவாவரவிட இலங்கையைச் சுற்றியுள்ள சமூகங்களைப் பாதிக்கும் கதைகளை ஆராயும் முதன்மையான ஒரு ஊடகவியலாளர். தொழிலாளர் மற்றும் பாலினம் ஆகிய துறைகளில் ஆராய்ச்சியிலும் பங்களிக்கிறார். எழுதாத நேரங்களில், அவர் தனது நேரத்தை வாசிப்பதிலும், தீவு முழுவதும் சுற்றி வருவதிலும், டிக் டோக் மூலம் தனது நேரத்தை செலவிடுவதிலும் மகிழ்ச்சி அடைகிறார். அவருடைய பல படைப்புகளை இங்கே காணலாம்.)

குறிப்பு இணைப்புகள் மற்றும் மேலதிக வாசிப்பு

  1. Kumudu Priyanka, Wikipedia, https://en.wikipedia.org/wiki/Kumudu_Priyanka
  2. Kumudu delivers personal best in T47 long jump, https://island.lk/kumudu-delivers-personal-best-in-t47-long-jump/
  3. The great Paralympic journey of a regenerated Para Athlete, https://www.sundaytimes.lk/210912/sports/the-great-paralympic-journey-of-a-regenerated-para-athlete-455021.html

--

--

Everystory Sri Lanka
Everystory Sri Lanka

Written by Everystory Sri Lanka

Everystory Sri Lanka (formed in 2018) is a collective of young Sri Lankan feminists identifying as a storytelling collective.

No responses yet